கோடை விடுமுறையில் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு 1 மாத ஊதியம் 'கட்'
கோடை விடுமுறையால், 15 ஆயிரம் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு, ஒரு மாத ஊதியம் கிடைக்கவில்லை. இதனால், சிறப்பாசிரியர்கள் பலர், பள்ளி திறந்த முதல் நாளிலேயே, கண்ணீரும், கவலையுமாக பணிக்கு வந்து சென்றனர்.
நிரந்தர ஊதியம்:அரசு பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப்பாடங்கள், இயற்பியல், வேதியியல், பொருளியல், கணக்குப் பதிவியல் உள்ளிட்ட முக்கியப் பாடங்களுக்கு, நிரந்தர ஊதியத்தில் ஆசிரியர் உள்ளனர். ஓவியம், தையல், இசை, நெசவு, கைவினைக் கலை உள்ளிட்ட செய்முறை கல்வி பாடங்களுக்கு, பெரும்பாலும் பகுதிநேர ஆசிரியர்களே உள்ளனர். கடந்த 2012ல், இந்த சிறப்பு பாடங்களுக்கு, 16,549 பேர் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.
இவர்கள், வாரத்தில், மூன்று அரை நாட்கள் பணியாற்ற வேண்டும். ஆனால், பல பணிகளுக்கு, இவர்களை கல்வித் துறை பயன்படுத்தி வருகிறது.இவர்களுக்கு, மாதம், 7,000 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது; வேறு எந்த சலுகைகளும் இல்லை. இதனால், 1,380 பேர் பணியில் இருந்து விலகி விட்டனர்; 15,169 பேர் மட்டும் தற்போது பணியாற்றுகின்றனர்.
இவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை, அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கோடை விடுமுறை நாட்களுக்கு, ஊதியம் வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து, பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும், நான்கு ஆண்டுகளாக இந்த நிலையே உள்ளது.
அறிவிப்பு இல்லை'இந்த ஆண்டு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர். ஆனால், இதுவரை, மே மாத ஊதியம் வழங்குவது குறித்து, எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.
இதனால், பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் பலர், கல்வி ஆண்டின் முதல் நாளான நேற்று, கண்ணீருடன் பணிக்கு வந்தனர்; ஊதியம் வருமா என்ற கவலையுடன் திரும்பினர்.இதுகுறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச் சங்க, மாநில தலைவர் ராஜ்குமார் கூறும்போது, ''சிறப்பு ஆசிரியர்களுக்கு, ஒவ்வொரு தேர்வு வரும் போதும், விடுமுறை விடும் போதும், ஊதியம் வராமல், வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய சூழல் உள்ளது. இதுகுறித்து, முதல்வரின் தனிப்பிரிவில் கடந்த வாரம் மனு அளித்துள்ளோம். இந்த ஆண்டாவது, மே மாத ஊதியத்தை வழங்கினால், 15 ஆயிரம் குடும்பங்களின் கவலை தீரும்,''
Tuesday, June 2, 2015
பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு 1 மாத ஊதியம் 'கட்'
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment