பள்ளிக் கல்வித் துறையில் ரூ.278 கோடியில் புதிய கட்டடங்கள்- விடுதிகள்: முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்
பள்ளிக் கல்வித் துறையில் ரூ.278 கோடியில் புதிய கட்டடங்கள்- கூடுதல் வகுப்பறைகள், மாணவ, மாணவியருக்கான விடுதிகள் உள்ளிட்டவற்றை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பள்ளி மாணவ-மாணவியருக்கு கல்வி மேம்பாட்டுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவர்களுக்கு கட்டணம் இல்லாத கல்வி, சத்தான உணவு, விலையில்லாத சீருடைகள் உள்ளிட்ட பல முக்கிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், சேலம் பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.2.35 கோடியில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டடத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.
பெண்குழந்தைகள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ், ரூ.43.54 கோடியில் கடலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 18 மாணவியர் விடுதிகள், பல்வேறு மாவட்டங்களில் ரூ.52.36 கோடியிலான 77 பள்ளிக் கட்டடங்களையும் அவர் திறந்தார்.
மேலும், தமிழகத்தில் 149 அரசு பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 484 கூடுதல் வகுப்பறைகள், 143 பள்ளிகளில் 143 ஆய்வுக் கூடங்கள், மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் ஆகியவற்றையும் முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார். நபார்டு வங்கிக் கடன் உதவித் திட்டத்தின் கீழ் 17 மாவட்டங்களில் அமைந்துள்ள 51 பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள், ஆய்வுக் கூடங்கள், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், 721 பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள ஆயிரத்து 240 கூடுதல் வகுப்பறைகள், கோவை மாவட்டம், வால்பாறையில் உண்டு உறைவிடப் பள்ளியில் கட்டடம், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம், துறையூர் ஆகிய இடங்களில் கிளை நூலகக் கட்டடங்கள் என மொத்தம் ரூ.278 கோடி மதிப்பில் புதிய கட்டடங்கள், விடுதிகள் உள்ளிட்டவற்றை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எடப்பாடி கே.பழனிசாமி, கே.சி.வீரமணி, தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் த.சபிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment