Monday, May 25, 2015

தங்க மூஞ்சூறுவை,

ஒரு இளைஞன்... வயது 18. பெற்றோர் இல்லை. யாரோ ஒருவர்குழந்தையாக இருக்கும் போது எடுத்து வளர்த்தார். அவரும் போன பிறகு, அநாதையானவன் ஒரு பிள்ளையார் கோயில் வாசலில் தங்கினான். அங்கு வரும் யார் யாரோ கொடுத்த உணவில் வளர்ந்தான். பிள்ளையாரப்பா! எனக்கு ஒரு நல்லவழி காட்ட மாட்டாயா? என வேண்டுவான். பிள்ளையார் அவனுக்கு அருள் வழங்கி நினைத்து விட்டார் போலும்! ஒருநாள், பணக்காரர் ஒருவர் கண்ணில் பட்டான். அவனை ஏனோ அவருக்குப் பிடித்துப் போனது. அவனுக்கு உதவும் எண்ணத்துடன், நாளை காலை என் வீட்டுக்கு நீ வா! என்றார். விடிந்ததும் பணக்காரர் வீட்டுக்குப் போனான். அவர் கோபத்துடன் கத்திக்கொண்டிருக்க, ஒருவர் கை கட்டி அவர் முன் நின்றிருந்தார். மூலதனத்தையே இழக்கும் விதத்தில் முட்டாள் தனமான தொழில் செய்திருக்கிறாயே? வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது உனக்குத் தெரியாதா? அங்கே தெருவில் கிடக்கிறது பார் செத்த மூஞ்சூறு! நினைத்தால் அதை கூட வைத்துக் கொண்டு கூட ஒருவன் பணக்காரனாகி விட முடியும், என்று சத்தம் போட்டார். இளைஞன் பயந்து போனான். 

பணக்காரர் பார்ப்பதற்குள் அங்கிருந்து நகர்ந்து விட்டான். ஒருகணம் யோசித்த அவன், தெருவில் கிடந்த செத்த மூஞ்சூறை கையில் எடுத்துக் கொண்டான். கடைத் தெருவிற்குச் சென்றான். அவனைக் கண்ட கடலை வியாபாரி, தான் வளர்க்கும் பூனைக்கு உணவாக அதைப் பெற்றுக் கொண்டு கொஞ்சம் பொரியும், கடலையும் கொடுத்தார்.  அதைச் சாப்பிட ஒதுக்குப் புறத்தில் இருந்த அரசமரத்தடி பிள்ளையார் அருகில் உட்கார்ந்தான். அங்கே ஒருவன், காட்டுக்குப் போய் விறகு வெட்டி வந்த களைப்பில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். அவன் மீது இளைஞன் இரக்கம் கொண்டான். தன்னிடமிருந்த பொரி, கடலையில் அவனுக்கு கொஞ்சம் கொடுத்தான்.  அவன் மீது விறகு வெட்டிக்கு அன்பு வந்தது. நன்றியுடன் ஒருகட்டு விறகை கொடுத்தான். இளைஞன் அதை விற்றுக் காசாக்கினான். அந்த காசுக்கு கடலைக்காரரிடம் போய் கடலை வாங்கிக் கொண்டு மரத்தடிக்கு வந்தான். அங்கு வரும் விறகு வெட்டிக்கெல்லாம் கடலையும், தண்ணீரும் கொடுத்தான். அதற்கு ஈடாக அவர்களும் ஆளுக்கு கொஞ்சம் விறகு கொடுத்துச் செல்ல ஆரம்பித்தனர். விறகுகளை ஓரிடத்தில் சேர்த்து வைத்தான். மழைகாலம் வந்தபோது, விறகுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டது. தன்னிடமிருந்த விறகுகளை நல்ல விலைக்கு விற்று பணம் சேர்த்தான். அதைக் கொண்டு சிறு  மளிகைக்கடை தொடங்கினான். அவனது நேர்மையான  வியாபாரம் கண்ட ஊரார் அவனை நாடி வந்தனர். பத்து ஆண்டுகளில் நல்ல நிலையை எட்டினான். தன் வாழ்வுக்கு ஒரு மூஞ்சூறுவின் மூலம் அடித்தளமிட்ட பணக்காரருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. தங்கத்தில் மூஞ்சூறு ஒன்று செய்து கொண்டு அவரைப் பார்க்கப் புறப்பட்டான். நன்றியுணர்வுடன், நடந்ததை எல்லாம் சொன்னான். அவர் வியந்து போனார். தன் ஒரே மகளை அவனுக்கு திருமணம் செய்து வைத்தார். பணக்காரருக்கு கொண்டு வந்த தங்க மூஞ்சூறுவை, தன்னை வாழ வைத்த பிள்ளையாருக்கு காணிக்கையாக்கினான்.

JEGADEES.

No comments:

Post a Comment